சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்

சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ நிதி மோசடிக் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு  விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இலங்­கையில் முதல் பெண்­மணி­யாக இருந்த ஒருவர், முதல்­மு­றை­யாக கைது செய்­யப்­பட்டு, சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

நாட்டின் அரசுத் தலை­வரின் மனைவி, நாட்டின் முதல் பெண்­ம­ணி­யாக கரு­தப்­ப­டு­கிறார்.  முன்னாள் பிர­தமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­காவின் மனைவி, சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் குடி­யு­ரிமை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­ன­வினால் பறிக்­கப்­பட்­டது.

ஆனால், அது அவர் முதல் பெண்­ம­ணி­யாக இருந்த போது, இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளுக்­காக அல்ல.

சிறி­மாவோ பண்டாரநாயக்க


பண்­டா­ர­நா­யக்க படு­கொலை செய்­யப்­பட்ட பின்னர், 1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை­யி­லான ஆட்­சிக்­கா­லத்தில் அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்தார் என்ற குற்­றச்­சாட்­டி­லேயே, 1980 ஆம் ஆண்டில் அவ­ரது குடி­யு­ரிமை 7 ஆண்­டு­க­ளுக்கு பறிக்­கப்­பட்­டது.

குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து அவர் பாரா­ளு­மன்­றத்தில் இருந்து நீக்­கப்­பட்டார்.

அவர் தேர்­தலில் போட்­டி­யி­டவோ அல்­லது தீவிர அர­சி­யலில் ஈடு­ப­டவோ முடி­யா­த­வாறு சட்ட ரீதி­யாகத் தடை விதிக்­கப்­பட்­டது.

சிறி­மா­வோவின் ஆட்­சிக்­கால சம்­ப­வங்­களை விசா­ரணை செய்ய நிய­மிக்­கப்­பட்ட  ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு, சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க மீது சுமத்­தப்­பட்ட 10 குற்­றச்­சாட்­டு­களில், அதி­கார துஷ்­பி­ர­யோகம் மற்றும் அதி­கா­ரத்தை தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­யது போன்ற 6 குற்­றச்­சாட்­டு­களை உறுதி செய்­தது.

ஜே.வி.பி. கிளர்ச்­சியைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக கொண்டு வரப்­பட்ட அவ­ச­ர­கால சட்­டத்தை, நாட்டில் இயல்பு நிலை திரும்­பிய பின்­னரும், தனது அர­சியல் எதி­ரி­களை ஒடுக்­கவும், அர­சாங்­கத்தின் தோல்­வி­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்­களைத் தடுக்­கவும் நீடித்­தது.

1975 ஆம் ஆண்டு நடத்­தப்­பட வேண்­டிய பொதுத்­தேர்­தலை 1977 ஆம் ஆண்டு வரை நடத்­தாமல் ஒத்­தி­வைத்­தது.

அர­சியல் எதி­ரிகள் மற்றும் எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­களை அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் அநி­யா­ய­மாகக் கைது செய்து சிறையில் அடைத்­தது.

நீதி­மன்ற வழக்­கு­களில் தலை­யிட்­டது.

நில உச்­ச­வ­ரம்பு சட்­டத்தின்  கீழ், சாதா­ரண மக்­களின் மற்றும் பெருந்­தோட்ட நிறு­வ­னங்­களின் காணிகள் அர­சு­டை­மை­யாக்­கப்­பட்ட போதும், அந்தச் சட்­டத்­தி­லி­ருந்து தனது குடும்ப உறுப்­பி­னர்­களின் மற்றும் நெருங்­கிய உற­வி­னர்­களின் பெரு­ம­ள­வி­லான நிலங்­களை சட்­ட­வி­ரோ­த­மாகப் பாது­காத்துக் கொண்­டது.

நீதி­ய­மைச்­ச­ராக இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்­டா­ர­நா­யக்­கவின் மூலம், அர­சாங்­கத்தின் முடி­வு­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றங்கள் தீர்ப்­ப­ளிக்க முடி­யா­த­வாறு நீதித்­து­றையின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டமை போன்ற குற்­றச்­சாட்­டுகள் சிறி­மாவோ மீது சுமத்­தப்­பட்­டன.

இந்தக் குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில், 1980 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 16 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணையின் மூலம், சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி பறிக்­கப்­பட்­ட­துடன், அவ­ரது குடி­யு­ரி­மையும் 7 ஆண்­டு­க­ளுக்கு இரத்து செய்­யப்­பட்­டது.

இந்தக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்­காக சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்டு அர­சியல் ரீதி­யாகத் தடை செய்­யப்­பட்­டாரே தவிர, அவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­ப­டவோ, சிறையில் அடைக்­கப்­ப­டவோ இல்லை.


ஆனால், முன்னாள் முதல் பெண்­மணி ஷிரந்தி ராஜபக்‌ஷவின் நிலை அப்­ப­டி­யல்ல. நிதி மோசடி குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்டு, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். 

சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்ட போது, அது அர­சியல் பழி­வாங்­க­லாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டது போலவே, ஷிரந்தி ராஜபக்‌ஷவின் கைதும் ஒரு அர­சியல் பழி­வாங்கல் என சில தரப்­பி­னரால் கூறப்­ப­டு­கி­றது.

ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம், ராஜபக்‌ஷவி­ன­ருக்கு எதி­ரா­கவோ அல்­லது முன்­னைய ஆட்­சி­களில் இடம்­பெற்ற மோச­டி­க­ளுக்கு கார­ண­மாக இருந்த அமைச்­சர்கள், அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ரா­கவோ மேற்­கொள்­ளப்­படும் விசா­ர­ணை­களை அர­சியல் பழி­வாங்கல் என கூறப்­ப­டு­வதை முற்று முழு­தாக மறுக்­கி­றது.

இவர்­க­ளுடன் தங்­க­ளுக்கு எந்த பகையும் இருக்­க­வில்லை, தனிப்­பட்ட ரீதி­யான கோப­தா­பங்கள் இல்லை, ஆனால், நாட்டின் சொத்தை சூறை­யா­டி­ய­வர்கள் மோசடி செய்­த­வர்கள் சட்­டத்­தின்­ப­டியில் இருந்து தப்­பிக்க முடி­யாது. அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது என அர­சாங்கம் கூறு­கி­றது.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஆட்­சிக்கு வந்த தற்­போ­தைய அர­சாங்­கத்தின் காலத்தில் 16 முன்னாள் அமைச்­சர்கள், ஒரு முன்னாள் முத­ல­மைச்சர், 4 முன்னாள் அமைச்­சர்­களின் மனை­விமார், முன்னாள் அமைச்­சர்­களின் 7 பிள்­ளைகள், 5 முன்னாள் உள்­ளூ­ராட்சி சபை­களின் தலை­வர்கள் ஊழல் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பிரதி அமைச்சர் சுனில் வட்­ட­கல தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அதே­வேளை அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க வெளி­யிட்­டுள்ள ஓர் அறிக்­கை­யின்­படி, முன்னாள் அமைச்­சர்­க­ளான ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ, விமல் வீர­வன்ச, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, பஷில் ராஜபக்‌ஷ , ராஜித சேனா­ரத்ன, ரவி கரு­ணா­நா­யக்க, பிர­சன்ன ரண­துங்க, ஏ.எச்.எம். பௌசி, பந்­துல குண­வர்­தன, பிரி­யங்­கார ஜய­ரத்ன, ரோஹித போகொல்­லா­கம, கெஹ­லிய ரம்­புக்­வெல்ல, சரண குண­வர்­தன, சாம­ர­சம்பத் தச­நா­யக்க, பந்­துல குண­வர்­தன, பிய­சேன கமகே,  குமார வெல்­கம, துமிந்த திசா­நா­யக்க உள்­ளிட்ட பல முன்னாள் அமைச்­சர்கள்,மற்றும் ஷிரந்தி, நாமல், யோஷித,  ரோஹித, கோட்­டா­பய, பஷில், சமல் , ஷசீந்­திர, நிரு­பமா, சமிந்­திர, ஜாலிய விக்­கி­ர­ம­சூ­ரிய, உத­யங்க வீர­துங்க போன்ற ராஜபக்‌ஷ உறுப்­பி­னர்கள் சம்­பந்­தப்­பட்ட விசா­ர­ணைகள் மற்றும் சட்ட நட­வ­டிக்­கைகள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளன.

அநுர அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைது செய்­யப்­பட்டார்.

இப்­போது ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.

பல முன்னாள் அமைச்­சர்­களும், உயர் பத­வி­களில் இருந்த அதி­கா­ரி­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ராஜபக்‌ஷவினர் அதி­கா­ரத்தில் இருந்த போது, முக்­கிய பொறுப்­பு­களில் இருந்த அமைச்­சர்கள் அல்­லது அதி­கா­ரிகள் சிறைத்­தண்­ட­னையை பெற்­றி­ருக்­கி­றார்கள் அல்­லது குற்­றச்­சாட்­டு­க­ளுக்­காக சிறையில் இருக்­கி­றார்கள் அல்­லது நீதி­மன்­றத்தில் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இது ராஜபக்‌ஷ­வி­னரின் ஆட்சி மிக மோச­மா­ன­தாக இருந்­தி­ருக்­கி­றது என்­ப­தையே இது காட்­டு­கி­றது.

அதில் ஊழல், மோச­டிகள், மலிந்து போய்  இருந்­தி­ருக்­கி­றது, அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களும்,  முறை­கே­டு­களும் தாரா­ள­மாக இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

இத­னையே இப்­போது இடம்­பெற்று வரு­கின்ற கைதுகள் உணர்த்­தி­யி­ருக்­கின்­றன.

அர­சாங்­கங்­களில் ஊழல் மோச­டிகள், முறை­கே­டுகள், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம் பெறு­வது வழக்­கம்தான்.

இரும்புப் பிடியில் இருக்கும் சீனா­விலும் கூட, அவ்­வப்­போது உயர்­மட்டத் தலை­வர்கள் ஊழல் வழக்­கு­களில் சிக்கி மர­ண­தண்­டனை விதிக்­கப்­படும் நிலை உள்­ளது.

இவை இல்­லாத அர­சாங்கம் இருந்­த­தாக சரித்­திரம் இல்லை. ஒப்­பீட்­ட­ளவில் குறை­வாக இருக்­க­லாமே தவிர, முற்­றாக ஒழிக்­கப்­பட்­ட­தாக இருக்­காது.

தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­திலும் அதே நிலை இருக்­கி­றது.

இந்த அர­சாங்கம் இரண்டு ஆண்­டு­களில் பல குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்ள நேரிட்­டதை மறுக்க முடி­யாது.

எரி­பொருள் கொள்­வ­னவு, கொழும்பு துறை­மு­கத்தில் கொள்­க­லன்கள் விடு­விக்­கப்­பட்­டது,  நிலக்­கரி இறக்­கு­மதி போன்ற பல விட­யங்­களில் தற்­போ­தைய அர­சாங்கம் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டது.

இந்த குற்­றச்­சாட்­டுகள் உண்­மையா, பொய்யா என்­பது வேறு, அவை விசா­ரித்து உண்மை கண்­ட­றி­யப்­ப­டாத வரையில் அந்த குற்­றச்­சாட்­டுகள் மறைந்து போகாது.

அதனை இன்­னொரு அர­சாங்கம் வந்து தான் விசா­ரிக்க வேண்­டிய நிலை உள்­ளது என்றால், தற்­போ­தைய அர­சாங்கம் நியா­ய­மாக செயல்­ப­டு­கி­றது என்று கூற­மு­டி­யாது.

இப்­போது ராஜபக் ஷவினர் அடுத்­த­டுத்து கைது செய்­யப்­ப­டு­கின்­றனர், அவர்கள் குறி வைக்­கப்­ப­டு­வதை, அர­சியல் பழி­வாங்­க­லாக அடை­யா­ளப்­ப­டுத்த பொது­ஜன பெர­முன தீவி­ர­மாக முயற்­சிக்­கி­றது.

ராஜபக் ஷ குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் ஒவ்­வொ­ரு­வரும் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

பல்­வேறு மோச­டிகள், முறை­கே­டுகள், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களில் ஈடு­பட்­ட­தாக அவர்கள் மீது விசா­ர­ணைகள் நடக்­கின்­றன.

இந்த குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து அல்­லது விசா­ர­ணை­களில் இருந்து, தப்­பிக்­கலாம் என நினைத்தால் அது முட்­டாள்­தனம்.

ஏனென்றால் தேசிய மக்கள் மத்­திய அர­சாங்கம் அவர்­களை சிறைக்குள் தள்ளும் இலக்­குடன் தான்  இருக்­கி­றது.

நாமல் ராஜபக் ஷ சிறையில் அடைக்­கப்­பட்ட பின்னர் இப்­போது, ஷிரந்தி ராஜபக் ஷ  சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

யோஷித ராஜபக் ஷவின் நிலை அடுத்தடுத்த வாரங்களில் தான் தெரிய வரும்.


மஹிந்த ராஜபக் ஷவின் நிலை கூட பாதுகாப்பானதாக இல்லை.

கோட்டாபாய ராஜபக் ஷ அடிக்கடி விசாரணைக்காக சென்று வரும் நிலையில் இருக்கிறார்.

பசில் ராஜபக் ஷவை அமெரிக்காவில் இருந்து கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன.

இப்படி ராஜபக் ஷவினர் அடுத்தடுத்து சிறையும் விசாரணையுமாக அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இது அவர்களின் கடந்த கால தவறுகளின் விளைவு.அவர்களின் ஆட்சியில் இடம்பெற்ற தவறுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை வந்திருக்கிறது. 

அவர்களின் ஆட்சிகாலத்தில் இடம் பெற்ற அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் நிதி முறைகேடுகளுக்கும் பதில் சொல்லுகின்ற சூழல் தான் இப்போது உருவாகி இருக்கிறது.

இதனைக் கடந்து, தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் குற்றங்களுக்கும் மீறல்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடும் ராஜபக் ஷவினருக்கு உள்ளது. அந்த பொறுப்புக்கூறலை நிறைவேற்றுகின்ற நிலையில், தற்போதைய அரசாங்கம் இல்லை.

அந்த விடயத்தில் அவர்களை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

கார்­வண்ணன்

பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்