ஜோத்பூரில் இந்திய விமானப்படையின் ஏற்பாட்டில் தரங் சக்தி (Tarang Shakti 2026) கூட்டுப்பயிற்சி இறுதி கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில், இறுதிக்கட்டப் போரின் போதான இந்திய விமானப்படையின் நேரடித் தொடர்பு பற்றிய பல தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. செப்டெம்பர் 26 ஆம் திகதி ஜோத்பூரில் தொடங்கிய தரங் சக்தி கூட்டுப் பயிற்சி நாளை வரை (ஒக்டோபர் 12) இடம்பெறுகிறது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்ரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தமது வான்கலங்களை இந்த கூட்டுப் பயிற்சிக்காக அனுப்பியுள்ளன. சுமார் 30 நாடுகள் இதில் கண்காணிப்பாளர்களாக பங்கேற்கின்றன.
முதல்முறையாக F-35 A ஸ்ரெல்த் போர் விமானங்களை, இந்தக் கூட்டுப் பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறது அமெரிக்கா.
இந்திய விமானப்படை, ரபேல், எஸ்யூ-30 MKI, தேஜாஸ்,, மிராஜ்-2000, ஜகுவார், மற்றும் மிக் -29 போர் விமானங்களையும், பிரான்ஸ், ரபேல் போர் விமானங்களையும், ஜேர்மனி, A400M போக்குவரத்து விமானம் மற்றும் F-16 போர் விமானங்களையும், KC-30A மற்றும் MRTT போன்ற விமானங்களையும் அனுப்பியிருக்கிறது.
இலங்கை விமானப்படையின் Beechcraft King Air 360ER கண்காணிப்பு விமானம் ஒன்று இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கிறது.
இது, இலங்கை விமானப்படையுடன், இந்தியா மேற்கொள்ளும் முதலாவது கூட்டுப்பயிற்சி அல்ல. இது இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இருநாட்டு விமானப்படைகளும் கூட்டாக இணைந்து செயற்பட்டிருக்கின்றன.
கூட்டுப் பயிற்சிகளில் மாத்திரமன்றி கூட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கின்றன.
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் முதலாவது ஆயுத கிளர்ச்சியின் போது, இந்தியா விமானப்படையின், ஆறு Alouette III மற்றும் Mi-4 ஹெலிகொப்டர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவற்றின் களப் பணியாளர்கள் மற்றும், 8 விமானிகளும், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்திய ஹெலிகொப்டர்கள் காலிமுகத்திடலில் தற்காலிக கட்டளை மையம் ஒன்றை அமைத்து தினமும் 12 மணித்தியாலங்களுக்கு மேலாக, படையினரையும், ஆயுதங்கள் மற்றும் மருத்துவப் பொருள்கள் விநியோகத்தையும் மேற்கொண்டன. அதுபோல, 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தினர், ஒப்பரேசன் பவான் நடவடிக்கையை மேற்கொண்ட போது, இலங்கை விமானப்படையின் பெல்- 414 ஹெலிகொப்டர்களின் உதவி பெறப்பட்டது.
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலத்தை முறியடிப்பதற்காக, இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியிருந்தது.

பின்னர் 2007 ஆம் ஆண்டு மேலும் இரண்டு இதே வகை ரேடார்களை வழங்கியது.
அதுமாத்திரமன்றி, தோளில் இருந்து ஏவப்படும் ஒரு தொகுதி IGLA ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் இலங்கைப் படையினருக்கு இந்தியா வழங்கியிருந்தது.
அத்துடன் எல்-70 ரகத்தைச் சேர்ந்த 40 மில்லிமீற்றர் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் 24ஐ, இந்தியா அப்போது வழங்கியது. இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டதை அந்தக் காலகட்டத்தில் இந்தியா பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கவில்லை. அரையும் குறையுமாக சில தகவல்களை வெளியிட்டது. அவற்றை தற்காப்பு ஆயுதங்கள் என்றும் நியாயப்படுத்தியது.
2021ஆம் ஆண்டு இந்தியா வழங்கிய ரேடார்களை மறுசீரமைப்பதற்கும், பழுது நீக்குவதற்கும் தேவையான சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான உதிரிப்பாகங்கள் இந்தியாவினால் தனி விமானம் ஒன்றில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் விமானப்படைக்கு வழங்கப்பட்ட 54 'இக்லா' ஏவுகணைகளின், செயற்திறன் காலத்தை நீடிப்பு செய்யக் கூடிய தொழில்நுட்ப மரசீரமைப்புகளையும் செய்து கொடுக்க இந்தியா முன்வந்திருந்தது.
அதற்குப் பின்னரான காலகட்டத்தில் 18, எல்--70 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், மறுசீரமைத்து நவீன மயப்படுத்திக் கொடுக்கப்பட்டது.

igla missile
இதனைத் தாண்டி, இந்திய விமானப்படை நேரடியாகவே, இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்தது என்பதற்கான சில ஆதாரங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.
இந்தியா வழங்கிய ‘இந்திரா’ ரக ரேடார்களை பராமரிப்பதற்கு, இந்தியா சிவில் பணியாளர்களை ஈடுபடுத்தியதாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன. அதனை இந்தியா முன்கூட்டியே அறிவித்திருக்கவில்லை.
2008 செப்டெம்பர் 9 ஆம் திகதி அதிகாலை 3.20 மணியளவில், விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியும் கொமாண்டோ அணியும், வவுனியா விமானப்படைத் தளத்தில் ஊடுருவி தாக்குதல் நடத்தின.
ஆட்டிலறி சூட்டாதரவுடன், வான்புலிகளின் விமானத் தாக்குதல் ஒத்துழைப்புடன் அந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
அந்த தாக்குதலின், பிரதான இலக்காக இருந்தது, இந்தியா வழங்கிய ரேடார் அமைப்பு தான்.
தென்பகுதியில் உள்ள இலக்குகளை விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தாக்குவதற்குத் தடையாக இருக்கக் கூடிய இந்த ரேடார்களை அழிக்கும் நோக்கில் அந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது.
அந்த தாக்குதலில் ரேடார் சேதமடையவில்லை என்று இலங்கை விமானப்படை கூறியது.
ஆனால், அங்கு பணியாற்றிய இரண்டு இந்தியர்கள் காயமடைந்தனர் என்று இந்திய, இலங்கை அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்டன. இந்திரா ரக ரேடாரைத் தயாரித்த பெல் நிறுவனத்தின் சிவில் பணியாளர்களே காயமடைந்தனர் என அப்போது, கூறப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் தங்கள் தொழில்நுட்பப் பொறியாளர்கள் யாரும் அங்கு இருக்கவில்லை என்று கைவிரித்தது.
ஆனால், அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இரண்டு பேரும், இந்திய விமானப்படையால் பணியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தான். ஒரு பதவி உயர்வுப் பிரச்சினை, 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
இலங்கையில் ரேடார்களை இயக்குவதற்கான இந்திய விமானப்படையின் அந்த நடவடிக்கைக்கு, 'திருஷ்டி திட்டம்' எனப் பெயரிடப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த சிந்தாமணி ரௌட் எனும் இந்திய விமானப்படை அதிகாரி, வவுனியாவில் உள்ள ரேடார் படைப்பிரிவின் குழுத் தலைவராக பணியாற்றினார். விடுதலைப் புலிகளின் தாக்குதலின் போது, ஒரு குண்டுச் சிதறல் அவரது இடது காலின் பின்புறத்தில் தாக்கியது. இந்திய விமானப்படை பின்னர் அவரைப் போரில் பாதிக்கப்பட்டவராக அங்கீகரித்தது.
1989-ஆம் ஆண்டு மே மாதம் இந்திய விமானப்படையில் இணைந்த சிந்தாமணி ரௌட், 2007 பெப்ரவரி 8 முதல் 2008 ஒக்ரோபர் 10 வரை, இலங்கையில் பணிமாற்றம் செய்யப்பட்டதை, இந்திய ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தில், அவர் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உறுதி செய்திருக்கிறது.
531/2019 என்ற இலக்கமுடைய இந்த வழக்கில் 2019 நவம்பர் 21 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
வவுனியாவில் ரௌட்டிற்கு ஏற்பட்ட காயத்தின் பாதிப்பினால், 2011--12 மற்றும் 2018--19 இற்கு இடையில் நடந்த அடுத்தடுத்த சுற்றுகளில், அவர் இளநிலை அதிகாரியாகப் பதவி உயர்வு பெறுவதை தடுத்தது. அந்தத் தடையை எதிர்த்து அவர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
2019 நவம்பர் 21 ஆம் திகதி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், அவர் இலங்கையில் பணியில் அமர்த்தப்பட்டது ஒப்புக் கொள்ளப்பட்டிருந்ததுடன், ‘திருஷ்டி திட்டம்’ பற்றியும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கையே ‘திருஷ்டி திட்டம்’ என பெயரிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்துடன் தொடர்புடைய இன்னும் பல அதிகாரிகள் பற்றிய விபரங்களும் அதிகாரபூர்வ ஆவணங்களின் உதவியுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் எயார் கொமடோர் வினோத் குமார் சிங் யாதவ் என்ற அதிகாரி, இந்திரா ரேடார்களை இலங்கையில் அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளுகளுக்கு எதிரான, திருஷ்டி திட்டத்திற்கான முக்கிய ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகித்தார் என இன்னொரு ஆவணம் கூறுகிறது.
ஜகதீஷ் பிகாஜி ராணே என்ற அதிகாரி, இலங்கையில் உள்ள இந்திய விமானப்படைப் பிரிவின் தலைமை செயற்பாட்டு அதிகாரியாகவும், இலங்கைத் தீவின் வான் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்தார் என பாராட்டுச் சான்றிதழில், குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும் இரண்டு முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரிகள், இலங்கையில் தங்களின் பங்களிப்புகளைப் பொதுவெளியில் விவரித்துள்ளனர். ஆஷிஷ் ராஜ்புத் என்பவர், இலங்கையில் நிர்வாக மற்றும் செயற்பாட்டு மையத்தைத் தான் அமைத்ததாக எழுதியுள்ளார்.
மனோஜ் குப்தா என்பவர், 'திருஷ்டி திட்டத்தின் படைப்பிரிவுத் தளபதி'யால் 2007 ஜனவரியில் தனக்கு வழங்கப்பட்ட ஒரு பாராட்டுச் சீட்டைப் பதிவு செய்துள்ளார்.
அவரது இந்த தனிப்பட்ட குறிப்பானது, 2007இல் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த சிந்தாமணி ரௌட், தனது பணியை வவுனியாவில் தொடங்குவதற்கு முன்னரே, அங்கு இந்திய விமானப்படையின் ஒரு பிரிவுத் தளபதி இருந்ததை காட்டுகிறது.
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்கான ரேடார்களை அமைப்பது என்ற போர்வையில், இந்தியா தனது விமானப்படை அதிகாரிகளை இலங்கையில் நிறுத்தியிருக்கிறது என்பதை இந்த தகவல்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
இவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, புலிகளுக்கு எதிரான போரில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்தியா அதனை ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளவில்லை.
இருதரப்பு ஒத்துழைப்பு என்ற போர்வையில் இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையில் தன் இருப்பை நிலைநிறுத்த முற்பட்டிருக்கிறது.
அதைவிட, இலங்கை விமானப்படையின் மிக்- 27 விமானங்களின், 10 விமானிகளுக்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் இருவர் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.
இது இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அல்லது விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியா எந்தளவுக்கு பங்காற்றியது என்பதை உறுதி செய்கிறது. இவை மட்டுமல்ல, வெளிச்சத்துக்கு வராத இன்னும் பல உதவிகள், ஒத்துழைப்புகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. 1987இற்குப் பின்னரான காலகட்டத்தில், இலங்கையை வலுப்படுத்துவதன் மூலம், இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறது.
அதன் ஒரு அம்சமாகவே, இலங்கையில் ரேடார்களை நிறுத்தியிருக்கிறது.
போர்க்கப்பல்கள், கண்காணிப்பு விமானங்களை வழங்குவதன் ஊடாகவும், இந்தியா அதனை செய்து வருகிறது. அதற்கு அப்பால் கூட்டு பயிற்சிகளையும் பயன்படுத்திக் கொள்கிறது.
ஒட்டுமொத்தத்தில், இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்புகளும், கூட்டுப் பயிற்சிகளும் இராணுவ உறவுகளும் இந்திய பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனவே தவிர, இலங்கையின் மீதான கரிசனையாக கொள்ள முடியாது.
-சுபத்ரா-




