“நமது நாட்டில், தந்தை ஜனாதிபதியாக இருந்தால், மகனும் ஜனாதிபதியாக வேண்டும்; தந்தை பிரதமராக இருந்தால், மகனும் பிரதமராக வேண்டும் என்று மக்கள் பொதுவாக நினைத்து வந்தனர். அந்த அரசியல் ஒரு பழைய காலத்தைச் சேர்ந்தது- அது நவீன அரசியல் அல்ல, அது இப்போது மாற்றப்பட்டு விட்டது," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்மூலம் அவர் ராஜபக் ஷவினரின் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என்பதை பிரகடனப்படுத்த முயன்றார் என்பதில் ஐயமில்லை.
ஏனென்றால் மஹிந்த ராஜபக் ஷவுக்கு அடுத்து அந்த குடும்பத்தின் அரசியல் தலைமை தாங்க முற்பட்ட நாமல் ராஜ பக் ஷ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுன ஒரு பெரிய அரசியல் பேரணியை நடத்திய மறுநாள், ஜனாதிபதி அநுரவிடம் இருந்து இந்த கருத்து வெளிவந்திருந்தது.
அப்படியானால், ராஜபக் ஷவினரின் வம்ச அரசியலை மக்கள் முற்று முழுதாக நிராகரித்து விட்டனரா என்ற கேள்வி எழுகிறது.
ஜனாதிபதி ஒருவரின் மகன் ஜனாதிபதியாக வேண்டும், பிரதமரின் மகன் பிரதமராக வேண்டும் இலங்கையின் அரசியல் சரித்திரத்தில், வம்ச அரசியல் நீடித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஆரம்பத்தில் சேனாநாயக்க குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் என தொடங்கி, ராஜபக் ஷ குடும்பம் வரை அது கோலோச்சிய காலங்கள் உள்ளன.
இலங்கையின் முக்கால் நூற்றாண்டு அரசியல் வரலாற்றில்- இந்த மூன்று குடும்பங்களும் தான் பெரும்பகுதி காலத்தில் நாட்டை ஆட்சி செய்திருந்தன.
பண்டாரநாயக்க குடும்பம்சேனாநாயக்க குடும்பத்தினதும், பண்டாரநாயக்க குடும்பத்தினதும், அரசியல் ஏற்கெனவே முடிவுக்கு வந்து விட்டது.
ராஜபக்ஷ குடும்பத்தின் இரண்டாவது தலைமுறை அரசியல் அந்திமக் காலத்தை நெருங்கி விட்டாலும், மூன்றாவது தலைமுறை இன்னமும் தீவிர அரசியலில் தான் இருக்கிறது. நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வகிக்கிறார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில், அவரே வெற்றி பெறுவார் என்று, அவரது கட்சியினர் கூறி வருகிறார்கள்.
அவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக- முன்னர் ராஜபக் ஷவினருடன் கூட்டணி வைத்திருந்த பலர் இப்போது ஒன்றிணைய தொடங்கியிருக்கிறார்கள்.
அவர்களின் முயற்சியை முற்றாகத் தோற்கடித்து, பாராளுமன்றத்துக்குள்ளேயும் கூட, அவர்கள் இல்லாமல் போகின்ற நிலை ஏற்பட்டால் தவிர, வம்ச அரசியல் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கூறமுடியாது. ராஜபக் ஷ வம்ச அரசியல் அவ்வளவு இலகுவாக தோற்கடிக்கப்படக் கூடியதாக தோன்றவில்லை.
அதனை தீர்மானிப்பது, அவர்களின் தவறுகள் மாத்திரமல்ல.
அவர்களின் அரசியல் எதிரிகளின் தவறுகளும் கூட அதனைத் தீர்மானிக்கும்.
இன்றைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது அவர்களின் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில், -வாக்குறுதிகளின் அடிப்படையில். கவர்ச்சிகரமான தலைமைகளின் அடிப்படையில் அல்ல.
கடந்த கால அரசியல் தலைமைகளின் தவறுகளின் விளைவுதான், தற்போதைய அரசாங்கத்தின் தோற்றம்.
எனவே, ராஜபக் ஷவினரை அதிகாரத்துக்கு கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது தற்போதைய அரசாங்கமாகவோ அல்லது அடுத்து வரும் அரசாங்கங்களாகவோ தான் இருக்கும்.

ராஜபக்ஷ குடும்பம்
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாது போனால் மீண்டும் ராஜபக்ஷ வினருக்காக மக்கள் வாக்களிக்கக் கூடும்.
அவர்களின் அரசியல் கவர்ச்சி முழுமையாக மங்கிப் போகவில்லை என்பதை அநுராதபுரத்தில் நடத்திய பேரணி நினைவுபடுத்துகிறது.
ஆனால், ஜனாதிபதி அநுரவோ வம்ச அரசியலுக்கு தமது அரசாங்க முடிவு கட்டி விட்டது போல கருத்து வெளியிட்டிருக்கிறார்.
ஜனாதிபதியின் மகன் தான் ஜனாதிபதி, பிரதமரின் மகன் தான் பிரதமர் என்ற சூழல் இன்று இல்லை என்பது உண்மை.
அவ்வாறானதொரு நிலை, தற்போதைய அரசாங்கத்தால் மாற்றப்பட்டதென, உரிமை கோர முடியாது.
ஏனென்றால் ஜே.ஆரிடம் இருந்து பிரேமதாசவுக்கோ அவருக்குப்பின் டி.பி. விஜேதுங்கவுக்கோ ஜனாதிபதி பதவி அப்படிக் கிடைக்கவில்லை.
சந்திரிகாவிடம் இருந்து மஹிந்தவுக்கு கிடைத்த வாய்ப்பும் அப்படிப்பட்டதல்ல.
அவருக்குப் பிறகு வந்த மைத்திரி, ரணில், அநுரவும் கூட தந்தை வழிப் பதவியைப் பெற்றவர்கள் அல்ல.

அவர்கள் அதிகாரத்தில் தங்களின் செல்வாக்கை நிலை நிறுத்தி வந்தார்கள்.
ராஜபக் ஷவினர் மாத்திரம் தான், குடும்ப அரசியலை மோசமாக முன்னெடுத்தவர்கள்.
அவர்களின் இந்த குடும்ப அரசியல் இப்போது முடிவு கட்டப்பட்டிருக்கிறது.
ஆனால், வம்ச அரசியல் அல்லது வாரிசு அரசியல் முடிவு கட்டப்பட்டதாக கூற முடியாது.
குடும்ப அரசியலுக்கு, வம்ச அரசியலுக்கு முடிவு கட்டிவிட்டதாகவும் அதற்குத்தான் தமது கட்சியின் இடமில்லை என்றும் கூறுகின்ற தேசிய மக்கள் சக்தியே ஒருவகையில் அதனை ஆதரிக்கிறது என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் மூத்த அமைச்சராகவும் இருக்கும் பிமல் ரத்நாயக்கவின் மனைவி சமன்மலி குணசிங்க கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார்.
இதனை குடும்ப அரசியல் இல்லை என யாரும் மறுக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நிலையில், அவரது மகன் சதுரங்க அபேசிங்க கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார்.
இதுவும் குடும்ப அரசியல் தான்
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் வாய்ப்பு, வம்ச அரசியலுக்கு இடமில்லை என்றால், ஜே.வி.பி.யின் மூத்த தலைவர்கள் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள், எப்படி வம்ச அரசியலுக்கு துணை போக முடியும்?
அதேவேளை வம்ச அரசியல் முற்றும் முழுதாக ஒழிக்கப்பட்டு விட்டதாக தேசிய மக்கள் சக்தி கூறுவதும் தவறு.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஒரு பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இது பலருக்குத் தெரியாத இரகசியம்.
ஹர்ஷண நாணயக்காரவின் தந்தை யசபாலித நாணயக்கார, சிங்கள திரையுலகில் மிகப் பிரபலமான இயக்குனர், தயாரிப்பாளர்கள். அவரது ஏனைய இரண்டு சகோதரர்களான, ஹேமகுமார நாணயக்காரவும், வாசுதேவ நாணயக்காரவும், பிரபலமான அரசியல்வாதிகள். இவர்கள், இடதுசாரி அரசியலிலும் பின்னர், ஐதேக மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வழி அரசாங்கங்களிலும் அங்கம் வகித்தனர்.
ஹேமகுமார நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, மேல் மற்றும் தென் மாகாண ஆளுநராக பதவி வகித்தவர்.
அதேவேளை, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி போன்றவற்றின் ஊடாக பல்வேறு அரசாங்கங்களில் அங்கம் வகித்த வாசுதேவ நாணயக்கார, கடைசியாக கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், இப்போது இடதுசாரி அரசியலிலும் இல்ல, ராஜபக்ஷவினருடனும் இல்லை.
அவர் இப்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை புகழ்ந்து கொண்டிருக்கிறார். தேசிய மக்கள் சக்தியினரும் அவருக்கு புகழாரம் சூட்டுகிறார்கள்.
அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தமைக்கு காரணம் இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வாசுதேவ நாணயக்கார அண்மைக்காலமாக ஆதரித்து வருகிறார்.
அதற்கு முக்கிய காரணம், அவரது சகோதரர் யசபாலித நாணயக்காரவின் மகன் ஹர்ஷண நாணயக்கார, இந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பதவி வகிக்கிறார். இதுவும் ஒரு வம்ச அரசியல்தான்.

பிரதமர் ஹரிணி
பிரதமர் ஹரிணி அமரசூரிய தனக் குடும்பம் தொடர்பான சுய விவரங்களை பெரிதாக வெளிப்படுத்துவதில்லை.
அவரது தந்தை ஒரு தோட்ட நிர்வாகி, தாய் ஒரு இல்லத்தரசி, அவரது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்த முதல் நபர் ஹரிணி அமரசூரிய மட்டுமே என்று விக்கிபீடியா கூறுகிறது. இதைத் தவிர தவிர பெரிதாக எந்த விபரங்களும் பொதுவெளியில் இல்லை, ஆனால் அவர் ஒரு பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
காலியில் மிகப்பெரிய வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த ஹென்றி அமரசூரிய, டி.எஸ்.சேனநாயக்கவுடன் இணைந்து, சுதந்திரத்துக்கு முன்னரே, தேசிய காங்கிரஸ் ஊடாக அரசியலுக்கு வந்தவர். 1936 தொடக்கம் 1938 ஆம் ஆண்டு வரை ஹென்றி அமரசூரிய, தேசிய காங்கிரஸின் தலைவராக பதவி வகித்திருந்தார்.
1931 ஆம் ஆண்டு முதல்முறை அரச சபைக்கு உடுகமவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1936 தொடக்கம் 1947 ஆம் ஆண்டு வரை அவர் காலியை பிரதிநிதித்துவம் செய்தார்.
1947 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த அவர்1948 ஆம் ஆண்டு பத்தேகம இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று, பிரதி சபாநாயகர் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
1952, 1956 தேர்தல்களில் அவர் தோல்வியடைந்த நிலையில் 1956 ஆம் ஆண்டு செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
இவரது சகோதரர் தோமஸ் அமரசூரிய 1953 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்ட போதும், 1963 ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் இணைந்து அவரை செனட் தலைவராக நியமித்தன.
பௌத்த இயக்கங்களின் முன்னோடியாக, கல்வி வளர்ச்சிக்கான அடித்தளமாக இருந்த ஹென்றி அமரசூரிய, தெ ன்மாகாணத்தில் பல பெரிய பாடசாலைகளை உருவாக்கினார்.
அமரசூரிய குடும்பத்திடம், 6,000 ஏக்கர் தேயிலை, தென்னை, மற்றும் நபர் தோட்டங்கள் இருந்தன
சிறிமாவோ அரசாங்கம் 1972 ஆம் ஆண்டு காணி சீர்திருத்த சட்டத்தை கொண்டு வந்த போது இவர்களின் பெருமளவு நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன. அதன் பிறகு அவர்கள் கொழும்பு நோக்கி நகர்ந்தனர். அந்த வம்சத்தை சேர்ந்தவர்கள் தான் பிரதமர் ஹரிணி அமரசூரிய.
அவர் மாத்திரமல்ல, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக இருக்கின்ற ரஜீவ் அமரசூரியவும் அதே குடும்பத்தை சேர்ந்தவர் தான்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் மத்தியிலும் கூட, வம்ச அரசியல் வேர்கள் இருக்கின்றன.
இது ஜனாதிபதிக்கு தெரியாத விடயமும் அல்ல. அப்படி இருந்தும் அவர் வம்ச அரசியல் ஒழிக்கப்பட்டு விட்டதா கூறுவது வேடிக்கை.
-என்.கண்ணன்-




